‘பார்க்கிங்’: மூன்று தேசிய விருதுகள் வென்றுள்ளது!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதைக்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் என 3 பிரிவுகளில் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருதை ’பார்க்கிங்’ திரைப்படம் பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் & பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்திருந்த ‘பார்க்கிங்’ படம் அதன் வெளியீட்டிற்கு பின்பு விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. தற்போது 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்தது. அதில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை (தெலுங்கு படம் ‘பேபி’யுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) மற்றும் சிறந்த துணை நடிகர் விருது எம்.எஸ். பாஸ்கர் அவர்களுக்கும் என மூன்று தேசிய விருதுகளை அள்ளியுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம்.

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ். சினிஷ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தனர். அன்றாடம் வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் பார்க்கிங் சவாலையும் அதனால் ஏற்படும் உளவியல் மாற்றங்களையும் இந்தப் படம் நுட்பமாக அணுகியதாக ரசிகர்களும் சினிமா விமர்சகர்களும் பாராட்டினர். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர்கள் கே.எஸ். சினிஷ் மற்றும் சுதன் சுந்தரம் தெரிவித்திருப்பதாவது, “சிறந்த தமிழ் படத்திற்கான விருதை ‘பார்க்கிங்’ பெறுவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் ‘பார்க்கிங்’ படக்குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த சரியான அங்கீகாரம். நகர வாழ்க்கை, அங்கு ஏற்படும் பிரச்சினையால் வரும் ஈகோ, அவை எப்படி மனித உணர்வுகளையும் உறவுகளையும் மாற்றுகிறது என உலகளாவிய பார்வையாளர்களுக்கான கதையாக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இதை திரையில் கொண்டு வந்தார். ராம்குமார் கதை சொல்லும்போதே இது சிறந்த திரைக்கதை மற்றும் இதற்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்பினோம். அதன்படி தற்போது ‘சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது’ கிடைத்திருக்கிறது.
இந்தக் கதையை எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒத்துக்கொண்டு படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த என்னுடைய பார்ட்னர் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரத்திற்கும் நன்றி. பல லேயர் கொண்ட இந்த கதாபாத்திரங்களை உண்மையான உணர்வோடு திரையில் பிரதிபலித்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கருக்கும் ஸ்பெஷல் நன்றி. ’பார்க்கிங்’ படத்தின் அனைத்து திறமையான நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் எங்களுடன் பயணித்த அனைவருக்குமே இந்த விருது உரியது.

சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களுள் எம்.எஸ். பாஸ்கர் சாரும் ஒருவர். ‘பார்க்கிங்’ படம் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றிருப்பது தயாரிப்பாளர்களாக எங்களுக்கும் மகிழ்ச்சி. ‘பார்க்கிங்’ டீம் சார்பாக தேசிய விருது பெற்ற மற்ற வெற்றியாளர்களுக்கும் குறிப்பாக ‘வாத்தி’ பட பாடலுக்காக ‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வென்றிருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றனர்.

ஐடி ஊழியரான ஈஸ்வர், கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியுடன் புது வீட்டிற்கு குடி போகிறார். அவர்கள் குடிபோகும் வீட்டிற்கு கீழ் இருக்கும் இளம்பரிதியுடன் வண்டி பார்க்கிங் தொடர்பாக மோதல் உருவாகிறது. மோதல் வளர்ந்து ஒருக்கட்டத்தில் வெடிக்க இறுதியில் என்ன ஆனது என்பதுதான் ‘பார்க்கிங்’ திரைப்படம். நகர வாழ்க்கை, மனித மனங்களின் உணர்வுகள், ஈகோ, பாசம் என அனைத்தையும் வலுவான திரைக்கதை மூலம் நுட்பமாக காட்டியிருந்தது ’பார்க்கிங்’ திரைப்படம்.

டிசம்பர் 1, 2023 அன்று வெளியான இந்தப் படம் பின்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *