மிரளவைக்கும் “மிராய்” பட டிரெய்லர் 

ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த பெரும் கனவு திரைப்படத்தை, திரையில் உயிர்பித்துள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸே ரசிகர்கள் மத்தியில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாயகனின் வலிமையை மட்டுமல்ல, அவன் எதிர்நின்று போராட வேண்டிய ஆற்றல்மிக்க வில்லனையும் அறிமுகப்படுத்தியது. முன்னதாக வெளியான “வைப்” பாடல் இசை ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. இப்போது இறுதியாக டிரெய்லர் வெளியான நிலையில், கார்த்திக் கட்டமனேனி  (Karthik Ghattamaneni) கட்டமைத்திருக்கும் பிரம்மாண்ட உலகம் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சாதாரண இளைஞன், தன்னலமின்றி அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுபவன், தன்னை நோக்கி வரும் மிகப்பெரிய பணி குறித்து அறியாமல் இருக்கிறார். ஆனால் மனித குலத்தை அழிக்க முனைந்த கரும்படை (Black Sword) என்ற கொடிய சக்திக்கு எதிராக, ஒன்பது அரிய சாஸ்திரங்களை காப்பது தான் அவன் விதி. ஒரு மந்திரக் கோலின் சக்தியை கண்டுபிடித்தாலும், அவன் மனித வலிமை தீய சக்திக்கு எதிராக போராட போதாது. இறுதியில், அவர் தனது ஆன்மிக பக்தியிலிருந்து, குறிப்பாக இறைவன் ஸ்ரீ ராமரிடமிருந்து, துணிவு மற்றும் சக்தியைப் பெறுகிறார்.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி (Karthik Ghattamaneni) மிகப்பெரிய புது உலகத்தை கட்டமைத்துள்ளார். கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை ஒருங்கே செய்துள்ளார். மணிபாபு கரணம் எழுதிய பளிச்செனும் வசனங்கள் படத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. காட்சிகள் கண்களை விலக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமாக உள்ளன. இறுதியில் வெளிப்படும் இறைவன் ராமர் காட்சி, மிக அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.

தேஜா சஜ்ஜாவின் நடிப்பு அற்புதம். ஒரு சாதாரண இளைஞனிலிருந்து உலகின் பாரத்தைச் சுமக்கும் ஒரு சூப்பர் யோத்தாவாக மாறும் அவரது பரிமாற்றம் வெகு அழகாக  வெளிப்பட்டுள்ளது. அதிரடி காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் அர்ப்பணிப்பு, பயிற்சி மற்றும் உடல் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.

ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, பிளாக் ஸ்வோர்டு என்ற அழிவு சக்தியாக அச்சமூட்டுகிறார். ரித்திகா நாயக் வழிகாட்டும் ஆன்மீக சக்தியாக முக்கியப் பங்காற்றுகிறார். ஜகபதி பாபு சாது கதாபாத்திரத்தில் சிறப்பாகவும், ஷ்ரேயா சரண் தாயாக மனதை உருக்கும் வகையிலும், ஜெயராமின் புதிரான தோற்றமும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கௌரா ஹரியின் பின்னணி இசை, குறிப்பாக ஸ்ரீ ராமரின் காட்சிகளுக்கான பாடல்கள், அனுபவத்தை தெய்வீக நிலைக்கு உயர்த்துகின்றன. ஸ்ரீ நாகேந்திர தங்காளாவின் அபாரமான கலை அமைப்பும், நிர்வாக தயாரிப்பாளர் சுஜித் குமார் கொல்லியின் பங்களிப்பும், மிராய் உலகை உயிரோட்டமாக்குகின்றன.

எப்போதும் போல பீப்பிள் மீடியா பேக்டரி, இந்திய சினிமாவின் எல்லைகளைத் தாண்டும் வகையில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பை வழங்கியுள்ளது. காட்சியமைப்புகள், அதிரடி, VFX – அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த டிரெய்லர் மட்டுமே திரையரங்குக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்ல போதுமானதாக அமைந்துள்ளது. பிரம்மாண்டம், உணர்வுப்பூர்வமான அம்சங்கள், புராணம் – மூன்றையும் ஒருங்கிணைக்கும் “மிராய்” செப்டம்பர் 12 முதல் திரையரங்குகளில் பிரம்மாண்ட அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *