இதில் நான் ஹீரோ இல்ல.. கதை தான் : முனீஷ்காந்த் 

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இணைத்தயாரிப்பாளர், குட் ஷோ கே.வி.துரை பேசியதாவது, “டில்லி பாபு சார் கதைக்கேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் ரவிகுமார், “இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூறுகிறேன். ‘மிடில் கிளாஸ்’ படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது, “கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை. படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *