ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் கௌரவ் நாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.
சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.
மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.
இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
