இந்திய திரையுலகில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அறியப்படுகிறது. அர்த்தமுள்ள மற்றும் நல்ல கதையம்சம் சார்ந்த சினிமாவை ஆதரிப்பதில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெயர் பெற்றது. இந்த மரபைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது பாராட்டப்பட்ட குறும்படமான “லிட்டில் விங்ஸ்” வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற “லிட்டில் விங்ஸ்”, திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, இது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டு பார்வையாளர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதையொட்டி லிட்டில் விங்ஸ் குறும்படம் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து குறும்பட குழு செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநர் நவீன், நடிகை மணிமேகலை, நடிகர் ராம்ஜி, இயக்குநர் ராஜூமுருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி மற்றும் குழிவினர் கலந்து கொண்டனர்.
குறும்பட இயக்குநர் நவீன் பேசும் போது, “இந்த குறும்படத்தை எழுத தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவதற்கு திட்டமிடவில்லை. ஆனால், குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் என்ற கனவு இருந்தது, விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. எல்லா படமும் எழுத தொடங்கும் முன்பு ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் போது தான் கதை, திரைக்கதை அமைத்து படமாக முயற்சி செய்கிறோம். அடிப்படையில் இந்த கதை கொரோனா காலக்கட்டத்தில் தான் எழுதப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில் நிறைய துர்மரணங்கள் நிகழ்ந்த சமயத்தில், நம் ஆசைகளும் நம் மரணத்துடன் மரித்து விடுகிறது. திடீரென நம் மரணத்துடன் நம் ஆசையும் சேர்ந்து போய்விடுகிறது. உலகமும் அதோடு ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த கேள்வியை குறிப்பிடும் நோக்கத்தில் தான் இந்த கதை எழுதப்பட்டது. அவர் ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படுகிறாரே தவிர, அதில் இருக்கும் விஷயங்கள் இதுதான்.
எங்கள் ஊரில் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின் வாழ்க்கையில் தீர்வு இருக்காது. அது ஒரு தொடர் போல நீண்டு கொண்டே இருக்கும். அந்த மாதிரியான வீடுகளில் சிலர் குடித்துவிட்டு உயிரிழந்துவிடுவார்கள். அதன்பிறகு அந்த பெண்கள் சுதந்திரமாக இருப்பது நமக்கு தெரியும். அந்த சூழலில் ஒருவரது மரணம் இன்னொருத்தருக்கு விடுதலையை கொடுக்கிறது. இந்த இரு கேள்விகளை குறிப்பிடும் வகையில் தான் இந்த கதையை நான் எழுதினேன்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடர்ச்சியாக படித்துக் கொண்டு இருக்கும் போது, கந்தர்வன் எழுதிய கதை இதற்கு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இது தான் இந்தப் படம் ஆரம்பித்த விதம். இதன் கதையை எழுதி முடித்ததும், என் இயக்குநரிடம் காண்பித்தேன். நான் எழுதும் கதைகளை இயக்குநரிடம் காண்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். என் முதல் சிறுகதை விகடனில் வெளிவர முக்கிய காரணமாக என் இயக்குநர் இருந்தார். அந்த வகையில், இந்த கதையை படித்ததும் அதனை செய்வதற்கு அவர் தயாராக இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
இதில் சேவல் இருக்கிறது, அதை காட்சிகளை கிராஃபிக்ஸ் செய்கிறோமா அல்லது உண்மையில் படமாக்குகிறோமா என்பது போன்ற சிக்கல்களை பொறுமையாக கடந்துவர நேரம் ஆகிவிட்டது. என் நண்பர் அசோக், திலானி ரவீந்தரன் என்ற தயாரிப்பாளர் கனடாவில் இருந்து திரைக்கதை பற்றிய போட்டி இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நானும், இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி அனுப்பிவிட்டேன். இந்தப் படத்தின் முதல் தயாரிப்பாளர் திலானி ரவீந்திரன் தான்.

அந்தப் போட்டி தென் கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய போட்டியாளர்களை கொண்டிருந்தது. அதில் என் திரைக்கதை முதல் பரிசை வென்றது. அதில் கிடைத்த தொகை, ராஜூமுருகன் சார் இணை தயாரிப்பு மூலம் தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது. எடுத்தப் பிறகு இந்தப் படம் ஒரு வருடம் முழுக்க சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, கேரளாவில் நடந்த திரைப்பட விழாவில் விருது வென்றது. அதன்பிறகு இந்தப் படத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனால், நாங்களாக இந்தப் படத்தை வேறு எங்கும் அனுப்பவில்லை.
விருது வென்றதால் பல சர்வதேச திரைப்பட விழாக்கள் சார்பாக எங்களை தொடர்பு கொண்டு படத்தை அனுப்பக் கோரினர். இந்தப் படத்தை சரியாக கொண்டு சேர்க்க அதிக நேரம் ஆனது. தனித்து செயல்படும் போது, பெரிய நட்சத்திரங்கள் இன்றி எடுக்கும் போது பெரிய ஓ.டி.டி. தளங்களில் முயற்சி செய்தோம். அதற்கு நிறைய காலதாமதம் ஆனது. அதன்பிறகு இங்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தாங்குவது மிகப்பெரிய விஷயம். இனி வரும் உதவி இயக்குநர்களுக்கு இதுவொரு புது வழியாக இருக்கும். ட்ரீம் வாரியர்ஸ் குழுவில் பிரகாஷ் சார் தொடங்கி அனைவருக்கும் நன்றி. விருது வாங்கும் முன்பே இந்தப் படத்தை பிரகாஷ் சாருக்கு பிடித்துவிட்டது. அதன்பிறகு பிரபு சார், குகன் சார், அலாவுதீன், கிருஷ்ணா என அனைவக்கும் நன்றி.
நடிகர் ராம்ஜி, “இயக்குநருக்கும், எனக்கும் இது முதல் குறும்படம். முன்னதாக சில பெரிய படங்களில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், குறும்படத்தில் இவ்வளவு வேலைகள் இருப்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தான் உணர்ந்தேன். இந்தப் படத்தின் தலைப்பிற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. படத்தின் தலைப்பு “லிட்டில் விங்ஸ்”, நானும் லிட்டில் தான். அது எனக்கு பிடித்து இருந்தது. ஆனால், அதை இயக்குநரிடம் நான் கூறவில்லை. எனது யூடியூப் சேனலின் பெயரும் லிட்டில் மேன் ஷோ என்றுதான் வைத்திருக்கிறேன். எல்லோரும் என்னை பார்த்தால் கிண்டல் தான் செய்வார்கள். எனது புனைபெயரை தான் அப்படி வைத்தேன். எல்லோரும் நான் குள்ளம் என்றுதான் கிண்டல் செய்வார்கள், அதையே நான் புனைபெயராக வைத்தேன். அதேபோல் சாரும் லிட்டில் விங்ஸ் என வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது. எனது முதல் குறும்படம், இயக்குநருக்கும் முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சி. என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெரிய படத்தில் நடிக்கும் போது இருந்ததைவிட முதல் குறும்படம் தேசிய விருது வாங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. இயக்குநர் நவீன் சார் மிக்க நன்றி. இயக்குநர் ராஜூமுருகன் மற்றும் இந்தப் படக்குழுவை சேர்ந்த அனைவரும் கடும் உழைப்பை கொடுத்தனர். பெரிய படத்தில் கூட நான் பயிற்சி எடுத்ததில்லை, ஆனால், இந்தப் படத்தில் அனைவரும் முன்கூட்டியே பயிற்சி எடுத்து அதன்பிறகு நடித்தோம். இங்கு எல்லாமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு மேலும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி,” என்றார்.

