முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில், விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.
இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் 2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகை மாளவிகா பேசியதாவது..,
சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.
டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,

நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது.
அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.

நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது..,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.
இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.
இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
