‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போல் “லீடர்” மிக பெரிய வெற்றி பெரும் : லெஜெண்ட் சரவணன்

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.

இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது. முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது. ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது.

அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார். என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார். நடிகர்கள் பற்றி பேச வேண்டும்.

ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது.

நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார். “நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,” என்றார்.

லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் ‘லீடர்’. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌ இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌ இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை.

பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள். இந்தத் திரைப்படம் ‘ஜெயிலர்’ போன்றோ அல்லது ‘விக்ரம்’ போன்றோ, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் ‘லீடர்’ படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌ இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள். “கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க” என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார். ‘லீடர்’ திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது. இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *