“கேப்டன் பிரபாகரன்” வெற்றிக்கு பிறகு பத்து வருடத்திற்கு  வாய்ப்புகளை தேடி வந்தது : ரம்யா கிருஷ்ணன்

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம்.

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்

இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. 

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, “தமிழில் நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி இல்லாத சமயத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு வந்தது. அதில் இரண்டாவது கதாநாயகி தான். ஆனால் அந்த படம் எனக்கு கொடுத்த வெற்றி அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகளை தேடி வந்து கொடுத்தது. இப்போ வரைக்கும் அந்த ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக இருக்கிறது. இன்று விஜயகாந்த் இருந்திருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் இரண்டு மடங்கு வெற்றி பெறும் என அவர் மேலே இருந்து வாழ்த்துவார் என நம்புகிறேன்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *