‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”கோயம்புத்தூரில் பீளமேடு பக்கத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் நாங்கள் இருந்தோம் .அங்கிருந்து சித்தா புதூர் எனும் புது ஏரியாவிற்கு குடிபெயர்ந்தோம். அந்த ஊருக்கு செல்லும் வழியில் கேரம் கிளப் என்ற ஒரு விளையாட்டு கூடம் இருந்தது. எனக்கு கேரம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த கிளப்பில் கேரம் விளையாடினேன். புது நபர் என்பதால் என்னுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எதிர்த்து விளையாடினார்கள். நான் நன்றாக விளையாடுவேன். அதனால் தினமும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தேன். அங்குள்ளவர்கள் ‘ச்சே! இந்த நேரத்தில் நம்மாள் இல்லையே..!’ என வருத்தப்பட்டனர். இது தினமும் தொடர்ந்தது. எனக்கும் அந்த நபர் யார், என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து எங்கள் இருவரையும் கேரம் விளையாட வைத்தனர். அவர் அறிமுகமான பிறகு அவரும் நானும் ஆடத்தொடங்கினோம். அவருடைய ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நான் சற்று பொறுமையாக விளையாடினேன். அவர் தொடர்ந்து நன்றாக விளையாட அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவருடைய பலவீனத்தை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் என் திறமையை வெளிப்படுத்தினேன். அப்போது அவர் லேசாக வியப்படைந்து என்னை பார்த்தார். கூட்டத்தில் உள்ளவர்கள் அவர் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்ற பதற்றம் அடைந்தனர், சற்று உணர்ச்சிவசப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சற்று யோசிக்கத் தொடங்கினேன். அத்துடன் என் ஆட்டத்தின் வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். கூட்டத்தில் உள்ளவர்கள் அவரை ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். பிறகு மெதுவாக விளையாடத் தொடங்க ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு அவரை பாராட்டினேன். அதற்கு நான் உங்களை வெற்றி பெறவில்லை. நீங்கள் தான் எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள். அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அவர் தோழனாகி, சிறந்த நண்பன் ஆகி விட்டார். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். அவர்தான் எனது நண்பரான பழனிச்சாமி. ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் இந்தி வாத்தியராக நடித்த பழனிச்சாமி. ‘தீனா’, ‘ரெட்டை ஜடை வயசு’, ‘ஆயுத பூஜை’ என மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இதை நான் இங்கு ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நட்பு என்பது எப்போதும் உயர்வானது. அதை சம்பாதித்தால் வேறு எதையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இங்கு நான் அவரை அழைத்து வந்து தயாரிப்பாளராக்கினேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் நண்பனை அழைத்து வந்து இயக்குநராக்கி இருக்கிறார். இவர்களுடைய நட்பு என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக தயாரிப்பாளருக்கு நான் பிரத்யேகமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் கருணாநிதி வெற்றிமாறனின் உதவியாளர் என சொன்னார்கள். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறும். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.

நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார்கள். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார். அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் நடித்த நடிகை அம்பிகாவை அவருடைய தங்கை ராதா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரிடம் அடுத்த படம் ‘தூறல் நின்னு போச்சு’ கிராமத்து சப்ஜெக்ட் அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். இதற்குள் எங்கள் இயக்குநர் அம்பிகாவையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தவறி தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்திற்கு சென்றார்கள். ஏனெனில் எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.
அதனால் அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோ வாசன் யூடியூப் பிரபலம் என்பதால் அவர்முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும்.
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அதனால் வெற்றியும் கிடைக்கும். இதனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்து இருக்கிறது. அதனால் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ”ஐபிஎல்- இந்தியன் பீனல் லா- இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்… இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.
இது போன்றதொரு செய்தியைத் தான் ‘ஐபிஎல்’ படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
