சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி’ இசை வெளியீட்டு விழா

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு – தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *