JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”.
வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…

இயக்குநர் முருகன் மகாலட்சுமி பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்கும் போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான் இந்த நிலைக்கு நான் வர காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.
சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்து தான் என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, நண்பர்கள், குறிப்பாக நாயகன் ஆதவ் கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள். ஒரு நண்பராகவும், ஒரு குழுவாகவும் இணைந்து வேலை செய்ததே இந்த படத்தின் பெரிய பலம். லவ்வர்ஸ் டே-யை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. புதிய இயக்குநர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். நல்ல கதைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். மிக்க நன்றி.
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது..,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது..,
இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த பாடலுக்கு பல பேரை அணுகி, இறுதியில் இயக்குநர் சரண் சாரை அணுகினோம். அவர் படத்தில் எப்போதும் எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிடும். அவர் அழகான பாடலை எழுதித்தந்தார். பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிரெய்லரில் இடம்பெறும் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள், பரபரப்பான எடிட்டிங் மற்றும் இசை இணைந்து, கல்லூரிப் பின்னணியில் ஒரு அழகான காதல் கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
