‘சுயம்பு’ படத்தின் டீசர் 2 மில்லியன் பார்வைகள் கடந்து சாதனை

நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிய தோற்றமும், அவரது திறமையான நடிப்பும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் நடிகர் நிகில் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறார். பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கும் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் பன்மொழிகளில் வெளியான குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டீசரின் பிரம்மாண்ட காட்சிகளும், நிகிலின் திரை ஆளுமையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மிகப்பெரிய அளவில் வரலாற்று படமாக உருவாகி இருக்கும் இந்த கதை, இந்திய வரலாறு மற்றும் புராணத்தை இணைத்து 985 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட போர்க்களத்தை வைத்து உருவாகியுள்ளது. கதையின் பிரம்மாண்டமும் நுணுக்கங்களும் டீசரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்துள்ளது. போர்வீரனுக்குண்டான வீரதீர தோற்றத்தில் நீண்ட தலைமுடி, சுருள் மீசை, அடர்தாடி, வலிமையான உடல் தோற்றத்துடன் டீசரில் நிகில் வருகிறார். பல அதிரடி சண்டைக் காட்சிகள் படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது.

சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் இருவருக்கும் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுப்பராஜு, சுனில் உள்ளிட்ட பலரும் கதையில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பரீதியாகவும் ‘சுயம்பு’ பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் எம். பிரபாகரன் மற்றும் ரவீந்தர் இருவரும் சேர்ந்து உருவாக்கிய வரலாற்று பின்னணி சூழல் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கே.கே. செந்தில் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகூட்டியுள்ளது. ரவி பஸ்ரூரின் அதிரடி பின்னணி இசை காட்சிகளுக்கு தீவிரத்தை சேர்க்க, முன்னணி இந்திய விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் உலகத்தரத்திலான காட்சிகளை உருவாக்கியுள்ளது. விஜய் காமிசெட்டியின் வசனங்கள் கதைக்கு வலிமை சேர்க்க கிங் சாலமன் மற்றும் ஸ்டண்ட் சிவாவின் சண்டைக் காட்சிகள், தம்மிராஜுவின் துல்லியமான படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு மிகப்பெரும் பலம்.
’சுயம்பு’ படத்தின் பிரம்மாண்டம், கதைசொல்லல் மற்றும் தயாரிப்பு தரம் ஆகியவை பீரியட் ஆக்‌ஷன் கதையை மறுவரையறை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *