ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்.., நடிகர் பரத் பேசியதாவது..,
‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.
இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.
என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.
முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.
